வக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
1 min read
Extension of time for submission of Waqf Bill Committee report
28.11.2024
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்பு மசோதா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்பட தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டி தனது அறிக்கையை வரும் 29-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வக்பு மசோதா கமிட்டி குழு கூட்டம் நேற்று நடைபெற்றபோது, கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யான் பானர்ஜி ஆகியோர் கமிட்டி தலைவர் ஜெகதாம்பிகா பால் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
நவம்பர் 29-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஜெகதாம்பிகா பால் உறுதியாக இருப்பதாகவும், கமிட்டியின் நடைமுறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து வக்பு மசோதா கமிட்டி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். கமிட்டியின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டதாக அவர்கள் விமர்சித்தனர். அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில், வக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வக்பு மசோதா கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.