புயல், வெள்ள பாதிப்பு: பிரதமரிடம் கேட்டது என்ன..? மு.க.ஸ்டாலின் விளக்கம்
1 min read
Storm and flood damage: What did you ask the Prime Minister? MK Stalin’s explanation
3.12.2024
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதற்கிடையே, பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்தசூழலில் பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைப்பேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.
தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தற்போதைய சூழல் எப்படி உள்ளது.? மழை, வெள்ளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? விவசாய நிலங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பனவற்றை முதல்-அமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ள சேதத்திற்கு ரூ.2,000 கோடி நிதி கோரி முதல்-அமைச்சர் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் புயல், வெள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடியிடம் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.
இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.