சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
1 min read
Rahul Gandhi stopped while trying to go to Chambal district
4.12.2024
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாடு தலம் இதற்கு முன் இந்து மத கடவுள் ஹரிஹரின் வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர்.
அப்போது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செல்ல திட்டமிட்டிருந்தார். ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சம்பல் மாவட்டத்திற்கு காரில் செல்ல புறப்பட்டனர். ஆனால், சம்பல் மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்திற்குள் செல்வாரா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு புறப்பட்டனர்.
ஆனால், டெல்லி , உத்தரபிரதேச எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். காசியாபாத் எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் காங்கிரசார் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.