June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்பு

1 min read

Devendra Fadnavis elected as Maharashtra Chief Minister; to take oath tomorrow

4.12.2024
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதால் முதல்-மந்திரி பதவி ஏற்க பா.ஜனதா விரும்பியது.
அதே நேரத்தில் முதல்-மந்திரி ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். ஆனால் இதனை எற்க பா.ஜ.க. மறுத்தது. அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதாவுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது. ஒருவேளை அப்படி தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சிவசேனா விரும்புவதாகவும் பா.ஜனதா தலைவர்களிடம் ஷிண்டே தெரிவித்திருந்தார். அதிகார பகிர்வு விஷயத்தில் பா.ஜனதா மீதான அதிருப்தியால் ஷிண்டே மாநில தலைநகரை விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.
இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என்று பா.ஜனதா அறிவித்திருந்தது. இந்த சூழலில் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக இன்று (புதன்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மராட்டியத்தின் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு செய்து வைக்கிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *