டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது மீண்டும் புகை குண்டுகள் வீச்சு
1 min readSmoke bombs again hurled at farmers heading towards Delhi
8.12.2024
கடந்த 2020ல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
எனினும், இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன் தினம் நடந்த டெல்லி சலோ போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர் புகை குண்டுகளால் குறைந்தது 16 விவசாயிகள் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கேட்கும் திறனை இழந்ததாக போராட்டக்குழு தரப்பில் கூறப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் தடைபட்ட போராட்டம் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று ‘டெல்லி சலோ’ பேரணியை மீண்டும் தொடங்கினர்.
அந்த வகையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் இன்று மதியம் டெல்லிக்கு மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
101 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது, அவர்களில் பலர் போலீஸ் வீசும் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தற்காத்து கொள்ள முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்த நிலையில் எதிர்பார்த்தபடியே போலீசார் குண்டுகளை வீசியுள்ளனர். 101 விவசாயிகளுக்கு போராட அனுமதி அளித்ததாகவும், ஆனால் கொடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள் பட்டியலுக்கு மாறாக வேறு ஆட்களும் அதிகம் பேரும் வந்ததால் குண்டு வீசியதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
கோரிக்கைகள் விவரம்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துவதோடு, விவசாயிகள் மீதான போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறவும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் கோருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என பஞ்சாப் விவசாய தலைவர் சர்வான் சிங் பந்தேர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.