கருப்பாநதி அணையில் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
1 min read
District Collector releases water from Karupanadhi Dam
1.1.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையிலிருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வரின் ஆணையின்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தண்ணீர் திறந்து வைத்தார்.
கருப்பாநதி அணைக்கு கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேலழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 9514.70 ஏக்கர் நேரடிப் பாசன மற்றும் மறைமுகப்பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பிசான பருவ சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 31.12.2024 முதல் 31.03.2025 வரை 91 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர், கடையநல்லூர், இடைகால், கிளாங்காடு, கம்பநேரி கிராமம், பொய்கை, திருமலாபுரம், சேர்ந்தமரம், குலசேகரமங்கலம், வீரசிகாமணி உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறும்.
எதிர் வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையினால் மேலும் அணையில் நிர்வரத்து அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நிர்வரத்து கிடைக்கப் பெறவில்லை யென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயனபடுத்தவும், நிர்லிநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஏ.கே.கமல்கிஷோர்,கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) .தனலெட்சுமி, உதவி செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) சுப்பிரமணிய பாண்டியன், உதவிப் பொறியாளர்கள் (நீர்வளம் ஆதாரத்துறை) சரவணக்குமார், திரு.உதயகுமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.