பொங்கலையொட்டி போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத்தொகை
1 min readRs. 6.41 crore incentive for transport employees on the occasion of Pongal
11.1.2025
அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களில், 2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும். இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 105 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் 6 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.