January 22, 2025

Seithi Saral

Tamil News Channel

ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு

1 min read

AIADMK announces boycott of Erode East elections

11/1/2025
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 17-ம் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மாபெரும் பேரியக்கமான “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்போற்றக் கழகம்” தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.
மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ‘அராஜகம், வன்முறை என்றாலே தி.மு.க, தி.மு.க. என்றாலே அராஜகம், வன்முறை’ என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலங்களில், தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.

கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க.வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.

தி.மு.க.வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே தி.மு.க.வினரின் வாடிக்கை.

நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.