நடிகர் சயீப் அலிகான் டிஸ்சார்ஜ்
1 min read
Actor Saif Ali Khan discharged
21/1/2025
மராட்டிய மாநிலம் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு வழக்கம் போல அவர் மற்றும் குடும்பத்தினர் தூங்க சென்றனர். மறுநாள் அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர் சயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு இருந்த பணிப்பெண் மர்மநபரை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். அந்த ஆசாமி பணிப்பெண்ணை தாக்கி உள்ளார்.
சத்தம்கேட்டு சயீப் அலிகான் உள்ளிட்டவர்கள் எழுந்து வந்தனர். அப்போது வீட்டில் மர்ம நபர் கத்தியுடன் ஆவேசமாக நிற்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சயீப் அலிகான் அந்த நபரை பிடிக்க முயன்றார். அப்போது அவர் சயீப் அலிகானை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் நடிகரின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது
இதில், படுகாயமடைந்த சயீப் அலிகான் பாந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டுவட பகுதியில் முறிந்து சிக்கியிருந்த கத்தி துண்டை டாக்டர்கள் 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இதையடுத்து சயீப் அலிகான் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் (வயது 30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.