திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாலாலய பூஜை
1 min read
Balalaya Pooja at Tiruchendur Murugan Temple
21.1.2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை மாதம் 7-ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி ராஜகோபுரம் பாலாலயம் நடைபெற்று, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலின் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், வல்லபை விநாயகர், நடராஜர், பைரவர் உள்ளிட்ட 17 சுவாமிகளின் விமானங்களுக்கு நேற்று பாலாலயம் பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விமான பிம்ப கடாஹர்சனம், ஹோம பூஜை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு விமான பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அத்தி மரத்திலான சித்ர பிம்பத்துக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. திருவனந்தபுரம், முட்டவிலா மடம் பிரம்மஸ்ரீ சுப்பிரமணியரு தந்திரி தலைமையில் தாந்திரீக முறைப்படி மூலவர் விமானத்துக்கு ஆவாகனம் செய்யப்பட்டது. பின்னர் ஆவாகனம் செய்யப்பட்ட கும்ப நீர் மகா மண்டபத்துக்கு மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு மூலவர் பாதத்துக்கு ஊற்றப்பட்டது.
மூலவர், வள்ளி, தெய்வானைக்கு போத்திமார்களும், சண்முகர், நடராஜருக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சார்யார்களும், வல்லப விநாயகருக்கு விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர் தலைமையில் திரிசுதந்திரர்களும் பூஜை செய்தனர்.
கும்பாபிஷேக திருப்பணிகளில் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ராஜகோபுரத்தின் மேலே உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. பின்னர் வரகுகள் நிரப்பி கலசங்களை ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன.