அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு
1 min read
Target to launch 100 more rockets in the next 5 years
30.1.2025
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை விண்ணில் நேற்று ஏவினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-
“விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ எட்டியுள்ளது. 100 ராக்கெட் திட்டங்களை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் திட்டம், வெள்ளி கோள் ஆய்வு திட்டம் என ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்ட பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலன்களை அனுப்பிப் பரிசோதிக்கும் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ககன்யான் விண்கலன்களை அனுப்புவதற்கான நவீன எல்விஎம்-3 ராக்கெட் தொழில்நுட்பம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. புதிய தலைமுறை தொழில்நுட்ப ஏவுதல் வாகனமான என்ஜிஎல்வி (Next Generation Launch Vehicle-NGLV) ராக்கெட்டை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
என்ஜிஎல்வி ராக்கெட் 91 மீட்டர் வரை உயரம் கொண்டது. தற்போதைய எல்விஎம்-3 வகை ராக்கெட்டுகள் அதன் உயரத்தில் பாதிதான். எனவே, நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவும் என்ஜிஎல்வி ராக்கெட்கள் அவசியம். அதேபோல், என்ஜிஎல்வி ராக்கெட் வாயிலாக 30 டன் வரையான எடை கொண்ட செயற்கைக் கோள்களை அனுப்பலாம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள 2 ஏவுதளங்களும் என்ஜிஎல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கு உகந்ததாக இருக்காது. அதனால், சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த 3-வது ஏவுதளமானது ரூ.4 ஆயிரம் கோடியில் என்ஜிஎல்வி ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளுடன் அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்கப்படும். மேலும், குலசேகரப்பட்டினம் ஏவுதளமும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
100 ராக்கெட்டுகள் ஏவுவதற்கு 46 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது போதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் 100 ராக்கெட்டுகளை வரும் 5 ஆண்டுகளில் ஏவ வாய்ப்பு உள்ளது. விண்வெளித்துறையில் தற்சார்பை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.