ஆலங்குளத்தில் பெண்ணை வெட்டிக் கொன்றவருக்கு 10ஆண்டுகள் சிறை
1 min read
Man who hacked and killed woman in Alankulam gets 10 years in prison
31.1.2025
தென்காசி மாவட்டம்,
ஆலங்குளத்தில் பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மங்கம்மாசாலையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தங்க செல்வி (வயது 37). சுரேஷிற்கும் அதே தெருவைச் சேர்ந்த ஜான் பாக்கியராஜ் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 26.06.2016 அன்று தங்க செல்வி தனது சகோதரியுடன் வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஜான்பாக்கியராஜ் மகள்கள் அமுதா ஸ்டெல்லா சாந்தி, அந்தோணி டெய்சி ஆகியோர் தங்க செல்வியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் எற்பட்டபோது அங்கு வந்த ஜான்பாக்கியராஜ் மகன் ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷ் ஆத்திரமடைந்து தங்க செல்வியை அவதூறாக பேசி தனது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தங்க செல்வி தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்க செல்வி திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 7.7.2016 அன்று தங்க செல்வி இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷ், அமுதா ஸ்டெல்லா சாந்தி, அந்தோணி டெய்சி ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ்.மனோஜ்குமார் வழக்கை விசாரணை செய்து ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷ் (வயது 49) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அமுதா ஸ்டெல்லா சாந்தி, அந்தோணி டெய்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவ்விருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றத்துறை வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜரானார்.