டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
1 min read
18 killed in stampede at Delhi railway station
16.2.2025
டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தற்போது கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரெயில் நிலையத்தில் தற்போது கூட்டம் குறைந்து இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனனர்.
விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரெயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவிவை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். அதேபோல, டெல்லி துணை நிலை ஆளுநரிடமும் பேசியிருக்கிறேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய அறிவுறுத்தியுள்ளேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.