4 ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சம் ‘குழந்தைகள்’ – மத்திய அரசு தகவல்
1 min read
3 lakh ‘children’ missing in 4 years – Central government information
14/2/2025
இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுத்தார் தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, “கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் ‘கோயா-பயா’ போர்ட்டலைத் தவிர, பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்தும் நான்கு மாதங்களாக கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிந்தார்.
மாவட்டந்தோறும் மனித கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மத்திய அரசு கூற்றுப்படி, பீகாரில், 2020 முதல் 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
பீகாரைப் போலவே, ஒடிசாவிலும் 2020 முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 4,852 பேரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 2020 முதல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர். அதில் 45,585 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருப்பினும், 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.