July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதாவின் நிலங்களை ஏழைகளுக்கு கொடுக்கலாம்- பெங்களூரு சிறப்பு கோர்ட் பரிந்துரை

1 min read

Jayalalithaa’s lands can be given to the poor – Bengaluru Special Court recommends

16/2/2025
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் நகைகள் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள், 1,526 ஏக்கர் நிலங்களின் பத்திரங்கள் பெங்களூரு, விதான சவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்படடிருந்தன.

அந்த ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்களை தமிழக அரசு பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மறு உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் மற்றும் நிலப் பத்திரங்கள், பழைய ரொக்கப்பணம் அனைத்தையும் தமிழக அரசு அதிகாரிகள் 6 பெட்டிகளில் வைத்து வேனில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு சென்னைக்கு எடுத்து வந்தனர்.

ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் நில பத்திரங்கள் பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் வைத்துள்ளனர்.

அந்த முதல் தளத்தில் லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த லாக்கர்களில் ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த கட்டிடத்துக்கு 20 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் விஷயத்தில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கும் வரை அவை அனைத்தும் சைதாப்பேட்டை அரசு கட்டிடத்தில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் நகைகள் தொடர்பாக கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவாலி, நிருபர்களிடம் சில விளக்கங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், குளிரூட்டும் பெட்டி உள்ளிட்ட எந்தப் பொருட்களும் கர்நாடக அரசின் வசம் தற்போது இல்லை. அவை அனைத்தும் தமிழக அரசிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன.

27 கிலோ எடைகொண்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அவற்றை 6 இரும்புப் பெட்டிகளில் வைத்து தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதுதவிர பழைய ரொக்க பணம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 384 ரூபாய் அளிக்கப்பட்டுவிட்டது. இதை ரிசர்வ் வங்கியிடம் அளித்து புதிய செலாவணியாக – மாற்றிக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளில் 2023-ம் ஆண்டு கணக்கின் படி உள்ள ரூ. 101 கோடியை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்துப் பொருள்களும், நிதியும் சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் சொத்துகள், பஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தமிழக அரசுக்கு சொந்தமானவை.

இந்த ஆபரணங்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தமிழக அரசு எடுத்துக்கொள்ளலாம் அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து அதன் மதிப்புத் தொகையைப் பெறலாம்.

இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பஸ் ஒன்றும் தமிழக அரசிடம் உள்ளது. அதையும் ஏலம் விடலாம் என சிறப்பு நீதிமன்றம் உத்தாவிட்டுள்ளது.

சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1526.16 ஏக்கர் நிலப் பத்திரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. இந்த நிலங்களை மனைகளாக மாற்றி வீடில்லா ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது நிலத்தை விற்று பணமாக்கி அரசு கருவூலத்தில் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபரணங்கள் சொத்துகளில் இருந்து கிடைக்கும் பணத்தை ஆரம்பப் பள்ளிக் கல்விக்கும், ஊரக உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் பயன்படுத் துமாறு சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் பின்னர் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவிடம் இருந்து அபராதமாகப் பெறப்பட்ட ரூ.20 கோடியே 20 ஆயிரம் கர்நாடக அரசிடம் உள்ளது. இந்தத் தொகையில், ஏற்கெனவே வழக்குச் செலவு தொகையாக ரூ. 5 கோடி, மேல்முறையீடு உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ.8 கோடி என மொத்தம் ரூ.13 கோடியை கர்நாடக அரசு எடுத்துக்கொண்டு, மீதம் ரூ. 7 கோடியை தமிழக அரசுக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆபரணங்களை ஒப்படைக்கும் பணி முழுமையாக புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் நகல்களை ஒருவாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.