‘சம்பல்’ கலவரத்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் சதி
1 min read
Conspiracy in the United Arab Emirates to launch ‘Sambal’ riots
22/2/2025
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி இந்து அமைப்பு தொடர்ந்து வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டருடன் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த கலவரம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பான 4,400 பக்க குற்றப்பத்திரிகையை உ.பி போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 79 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
இந்த கலவரத்தை சம்பலைச் சேர்ந்த ஷாரிக் சாத்தா என்பவர் திட்டமிட்டு நடத்தியதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. தற்போது ஷாரிக் சாத்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சம்பல் பகுதியில் கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லி – என்சிஆர் பகுதியில் மட்டும் இவரது கும்பல் 300-க்கும் மேற்பட்ட கார் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது. சம்பலை சேர்ந்த ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.
போலி பாஸ்போர்ட் மூலம் ஷாரிக் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கிருந்தபடியே சம்பல் கலவரத்துக்கு அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஷாரிக் கும்பலை சேர்ந்தவர்கள்தான் சம்பல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாவுர்ரகுமான் பார்க், எம்எல்ஏ இக்பால் மொகமூதின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, அவர்களுடைய பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.