மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்; பதுங்கு குழிகள் அழிப்பு
1 min read
Large number of weapons seized in Manipur; bunkers destroyed
8/3/2025
மணிப்பூரில் ராணுவத்தினர் நடத்திய சிறப்பு அதிரடி தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபுர், சுராசந்த்புர், கங்போக்கி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, சேனாபதி, தொபல், ஜிரிபம் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மணிப்பூர் மாநில போலீசார், சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர்.
பிஷ்னுபுர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டு தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், சந்தேல் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
காங்போக்கி மாவட்டத்தில் சோதனையின் போது, பதுங்கு குழிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் 114 ஆயுதங்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.