3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவை: டெண்டர் வெளியிட்டது மெட்ரோ ரெயில் நிறுவனம்
1 min read
Metro Rail Corporation issues tender for medium-high speed train service on 3 routes
26.3.2025
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரெயில்வே சேவையை சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வரை 167 கிலோ மீட்டருக்கும், சென்னை – காஞ்சீபுரம் – வேலூர் வரை 140 கிலோ மீட்டருக்கும், கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் வரை 185 கிலோ மீட்டருக்கும் வழித்தடங்கள் உருவாக்கிட தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை – செங்கல்பட்டு- திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், மித அதிவேக ரெயில் சேவையை (RRTS) உருவாக்கிட, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ வேகத்தில் ரெயில் செல்லும் வகையிலான, ஆர்.ஆர்.டி.எஸ். போக்குவரத்து டெல்லி – மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.