தமிழகத்தில் மட்டும் 436 சாதிகள்-கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்?
1 min read
There are 436 castes in Tamil Nadu alone – when will the census begin?
2.5.2/25
உலக நாடுகள் வரிசையில் அதிக மக்கள் தொகையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா.
146 கோடிக்கு மேல் மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2021-ம் ஆண்டு 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காலக்கட்டம் என்பதால், அப்போது இந்தப் பணிகள் நடைபெறவில்லை.
4 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதுவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எந்த வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், பவுத்தம், சமணம் என 6 மதத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே 3 ஆயிரம் சாதிகளும், 25 ஆயிரம் துணை சாதிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 436 சாதிகள் இருப்பதாக மாநில அரசு பட்டியலிட்டுள்ளது. அதுவும் 7 பிரிவுகளின் கீழ் இந்த சாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, பட்டியல் பழங்குடியினர் (36 சாதிகள்), பட்டியல் சாதியினர் (76), பிற்படுத்தப்பட்ட சாதியினர் (136), மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் (41), சீர்மரபினர் (68), முற்பட்ட சாதியினர் (79), பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (7) என சாதிகள் 7 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவே இல்லையா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம். ஏன் இல்லை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் முறையாக 1865-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதே சாதி விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும்போதும், அதாவது 1931-ம் ஆண்டு வரை 8 முறை நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் சாதி விவரங்கள் குறிக்கப்பட்டன.
சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்தான் சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்காக, அவர்களின் எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை விகிதாச்சாரமே கணக்கில் உள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும் அது வெளியிடப்படவில்லை.
தற்போது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இனி அதன் நோக்கம் மற்றும் காரணங்களை தெளிவாக விளக்கி அரசாணை வெளியிட்டு, அதை அரசிதழிலும் வெளியிடப்படவேண்டும். அதன்பிறகு, எப்போது இந்தப் பணிகளை மேற்கொள்ளத்தொடங்குவது?, யார் யாரை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது? என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.
அனேகமாக, அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல், மே மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், இதுபோன்ற கணக்கெடுப்பின் மூலம் சாதிவாரியான விவரங்களை வெளியிடும்போது, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இடஒதுக்கீடு என்பதை சாதிவாரியாக கொடுக்காமல், பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டு வழங்கினால் சிறப்பாகவும், முறையாகவும் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.