‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து
1 min read
Echoes of ‘Operation Sindoor’: Prime Minister Modi’s foreign trip canceled
7.5.2025
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது நார்வே, குரோஷியா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளின் பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
உளவுத்துறை தகவல் அடிப்படையில் அடுத்த சில நாட்கள் பயணம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.