பாவூர்சத்திரம் அருகே பைக் மீது கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி
1 min read
Government bus conductor killed after car hits bike near Pavurchatram
19.5.2025
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற அரசு பஸ் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து கார் டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ இவரது மகன் வேல்துரை (வயது 43) இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது வேல்துரை தனது குடும்பத்துடன் அடைக்கலபட்டணத்தில் வசித்து வருகிறார். தினமும் வேலைக்கு செல்லும் பொழுது தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறி பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று அதிகாலையில் பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வேகமாக வந்த கார் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர் வேல்துரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நபரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே பணிக்கு சென்ற அரசு பஸ் கண்டக்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.