கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து
1 min read
Governor’s appointment of Vice-Chancellors to universities in Kerala cancelled
20.5.2025
கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை கவர்னராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இவ்வாறு துணைவேந்தர்களை நியமனம் செய்த கவர்னரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில அரசு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், மாநில அரசு பரிந்துரைத்த தேர்வு பட்டியலை தவிர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை கவர்னர் நியமித்து உள்ளார். இதனால் கவர்னர் பல்கலைக்கழக சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டு உள்ளார். எனவே, கவர்னரின் துணைவேந்தர்கள் நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக துணைவேந்தர்களை நியமிக்கும்போது, மாநில அரசு வழங்கும் தேர்வு பட்டியலில் இருந்து மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். 2 துணைவேந்தர்களின் நியமனம் பொறுப்பு இன்றுடன் முடிவடைவதால், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட்டு தலையிடவில்லை.
மேலும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த கவர்னரின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.