104 மி.மீ. மழை பெய்ததே பெங்களூரு ஸ்தம்பிக்க காரணம்- சித்தராமையா விளக்கம்
1 min read
104 mm of rain brought Bengaluru to a standstill – Siddaramaiah explains
20.5.2025
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. எதிர்க்கட்சியின் கட்டமைப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர். கட்டமைப்புகளை மேம்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பயனும் இல்லை. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள் என விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “பெங்களூருவில் நேற்றுமுன்தினம் மழை பெய்தது. எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்தது. 104 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 21ஆம் தேதி நானும், துணை முதல்வரும் பெங்களூரு நகர் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ.க்களும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். இன்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.
இந்நிலையில், பெங்களூரு கனமழையின்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் மனோகர் கமத் (வயது 63). கனமழை காரணமாக இவர் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று மின்மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை வெளியேற்ற முயன்றுள்ளார். அவருக்கு நேபாளத்தை சேர்ந்த பரத் என்பவரின் மகனான சிறுவன் தினேஷ் (வயது 12) உதவி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்மோட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் நின்றுகொண்டிருந்த மனோகரை மின்சாரம் தாக்கியது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தினேஷ், மனோகரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 35 வயது பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—