தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
1 min read
Notorious rowdy arrested at gunpoint in Thoothukudi
23.5.2025
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்,
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் (வயது 40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தப்பி ஓடாதபடி எச்சரிக்கை செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயு தங்களை பறிமுதல் செய்தனர்.
தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.
வெடிகுண்டு வீசியும், பழிக்குப் பழியாகவும் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.