June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மகா விஷ்ணு-வின் பரம்பொருள் அறக்கட்டளை மூடல்

1 min read


Maha Vishnu’s Parammaaru Trust Closure

23.5.2025
சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.

அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த பிறவியில் பாவம் செய்தவர்களே மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்ற மகா விஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு சைதாப்பேட்டை பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளியான பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மகா விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் மகா விஷ்ணுவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின், ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாகவும், அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம், அந்த கட்டமைப்பு இனி இயங்காது என்று மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம்.

கடந்த பல வருடங்களாக பரம்பொருள் அறக்கட்டளை இறை அருளால் என் வழியாகப் பெரும்பாலும் இயற்கையாகவே உருவாகி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மாற்றங்களின் பின்னால் நான் இல்லை; பரம்பொருள் (இறைவன்) மட்டுமே இருந்தது. அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இப்போது, நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். என் உள்ளத்தின் மௌனம், அமைதி மற்றும் பரிபூரண நிலை என்னை எல்லா வெளியிலான கட்டமைப்புகளிலிருந்தும் விலகச் சொல்கிறது. நான் ஒரு அமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் கருதுகிறேன்.

“உண்மையான அருள் அமைப்பில்லாமலே இயங்குகிறது” அதனால், நான் எந்த ஒரு நெருக்கடியாலும் அல்லாமல், எந்த ஒரு வெளிப்பட்ட காரணத்தாலும் அல்லாமல், என் சொந்த ஆன்மீக வளர்ச்சிக்காக (சுயநலம் சார்ந்து), பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன். இனிமேல் பரம்பொருள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம். அந்த கட்டமைப்பு இனி இயங்காது. உங்கள் அன்பும், நம்பிக்கையும் நான் உள்ளத்தில் உணர்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *