போலீஸ் கமிஷனர் மீது உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
1 min read
Savukku Shankar files complaint against Police Commissioner to Home Secretary
23.5.2025
”வாகன விதி மீறல் வழக்குக்காக, நள்ளிரவில் கேமராமேன், விஷூவல் எடிட்டர் வீட்டில் புகுந்து பைக் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துகின்றனர்,” என்று சவுக்கு சங்கர் புகார் கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணிப்பேட்டையில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி, மாவட்ட எஸ்.பி., இடம் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தெய்வச்செயல் என்ற நபரை ஒரு மாதமாக போலீசார் கைது செய்யவில்லை. அந்த நபருக்கு முன் ஜாமின் கிடைக்கும் வரை போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.
மார்ச் 24ம் தேதி எனது வீட்டில் மனித கழிவு வீசிய பெண்ணுக்கு முன் ஜாமின் கிடைக்கும் வரை போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். சவுக்கு மீடியாவில் கேமராமேன், விஷூவல் எடிட்டர் ஆக வேலை பார்க்கும் இருவர் வீட்டில் நள்ளிரவு 11 மணிக்கு புகுந்த போலீசார், வாகன விதி மீறல் வழக்குக்காக பைக் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வாகன விதி மீறல் இருந்தால் அபராதம் செலுத்தினால் போதுமானது. அதற்காக நள்ளிரவில் போலீசார் கூட்டமாக சென்று பைக் பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்.இது தொடர்பாக உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் தமிழக மக்கள் ஓயமாட்டார்கள்.
இதை இந்த அரசும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஏதும் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். உள்துறைக்கு பொறுப்பான அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதால், ஒவ்வொரு போலீசார் செய்யும் அத்தனை வேலைகளுக்கும் அவர் தான் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.