ஆறுகளை மீட்டெடுக்க புதிய திட்டம்- முதலமைச்சர் வலியுறுத்தல்
1 min read
Chief Minister urges states to increase revenue by 50 percent of central revenue
24.5.2025
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்:-
கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
‘P.M.SHRI’ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.
நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.
சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.