நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை தவிர்க்க தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை
1 min read
Heavy rain warning in Tenkasi district – Collector information
24/5/2025
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மஞ்சள் எச்சரிக்கையும், ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொண்டு இருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.05.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.05.2025 மற்றும் 26.05.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்யும் போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும். நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.பொதுமக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில். பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04633 – 290548 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.