தென்காசி அருகே தொடர் விபத்து -கலெக்டர் அலுவலக கார் டிரைவர் பலி
1 min read
Serial accident near Tenkasi – Collector’s office car driver dies
26.5.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற தொடர் விபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் கார் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா (வயது 43) என்பவர் குடும்பத்துடன் தனது காரில் நெல்லை சென்று விட்டு அங்கிருந்து கிடாரக்குளத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கார் சிவலார்குளம் விலக்கு பகுதியில் நான்கு வழிச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமி யாபுரம் தர்மபுரி காலனியை சேர்ந்த பூச மாணிக்கம் (வயது 57) என்பவர் ஓட்டி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.
இதனால் விபத்துக்குள்ளான கார்களின் மீது நெல்லை,- தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்ற மற்றொரு காரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அடுத்தடுத்து மோதியது. சங்கிலி தொடராக நடைபெற்ற இந்த விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை கலெக்டர் அலுவலக கார் டிரைவரான மாறாந்தை பகுதியைச் சார்ந்த கணபதி (வயது 56) சிவலார்குளம் பகுதியைச் சார்ந்த ராகுல் சுதர்சன் (வயது 22) காரில் வந்த அனிஷா ஷாலினி (வயது 38) ஆகியோர் பலத்த காயமடைத்தனர்.
இதில் காயமடைந்த அனைவரையும் ஆலங்குளம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விடும் நிலையில் கலெக்டர் அலுவலக கார் டிரைவரான கணபதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மூளைச் சாவு அடைந்த கணபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.