பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
1 min read
POCSO case against Brij Bhushan dismissed
27/5/2-025
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடி வந்தனர்.
நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்த சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பெற்றது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிந்தனர்.
புகார்தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல்துறை, ஆறு மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, ஒரு மைனர் பெண் சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
போக்சோ வழக்கில் மைனர் பெண் மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.
பின்னர் நீதிமன்றம், காவல்துறை அறிக்கைக்குப் பதிலளிக்கக் கோரி, மைனர் பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
ஆகஸ்ட் 2023 இல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் காவல்துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தனது மகள் பொய் கூறிவிட்டதாக தந்தை தெரிவித்தார். இதனால் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில் தனது தந்தைக்கு எதிரான மீதமுள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும் பிரிஜ் பூஷனின் மகன் பிரதீக் பூஷண் சிங் தெரிவித்தார்.