டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறையை கண்டித்த ஐகோர்ட்டு
1 min read
TASMAC issue: High Court condemns the enforcement department
18.6.2025
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மே 16-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரிடமும் எதன் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது என்ற விபரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார்.
அதை ஆய்வுசெய்த நீதிபதிகள், ‘எங்கள் முன் தாக்கல் செய்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்து, முறைகேடில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.
வீட்டைசீல் வைக்க எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதிகள் பார்த்தனர்.
அதன்பின், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. வாதத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மதிய உண்வுக்கு மேல் ஒத்திவைத்தனர்.