மராட்டியத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்- ராஜ் தாக்கரே பேச்சு
1 min read
We will never accept imposition of Hindi in Maharashtra – Raj Thackeray’s speech
5.7.2025
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, “மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானுக்கு மூன்றாவது மொழி என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். இந்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஏன் உதவவில்லை.
இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஆனாலும், நாம் இந்தி கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஏன்?.
மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை” என்று தெரிவித்தார்.