திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமருக்கு மந்திரி எல்.முருகன் மகிழ்ச்சி
1 min read
Minister L. Murugan is happy with the Prime Minister for quoting Thirukkural
5.7.2025
‘ட்ரினிடாட் மற்றும் டொபாகோ’ பயணத்தில், மீண்டும் ஒருமுறை தனது தமிழ்ப் பற்றை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
உலகின் எந்த தேசத்திற்குச் சென்றாலும், இந்தியாவின் பழம்பெருமைகளில் ஒன்றான தமிழ் மொழி மற்றும் தமிழரின் பெருமைகளை பறைசாற்றம் பிரதமர்
நரேந்திர மோடி, கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு பயணத்தின் போது, மீண்டும் ஒருமுறை தனது தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்ரினிடாட் மற்றும் டொபாகோ அதிபர் கிறிஸ்டைன் கங்காலு அவர்களின் பூர்வீகம் தமிழ் என்பதறிந்து,
‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு’.
- வீரம் நிறைந்த படைபலம், தேசநலன் மீது அக்கறை கொண்ட மக்கள், அள்ளக் குறையாத செல்வம், நாட்டின் நலனறிந்து செயல்படும் அமைச்சர், அழிக்க முடியாத ராணுவம் மற்றும் ஆபத்தான காலங்களில் துணைநிற்கும் நட்பு நாடு; இவை அனைத்தும் தான் ஒரு தேசம் வளம் மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு தேவையான ஆறு அம்சங்கள் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ‘அய்யன் வள்ளுவன்’ உரைக்கிறார் என்று கூறி, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் புகழை உலக அரங்கில் பதியச் செய்துள்ளார்.
மேற்சொன்ன திருக்குறளின் பொருளுக்கேற்ப, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாடானது இந்தியாவுடன் எப்போதும் நல்ல விதமான நட்புறவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பயணத்தின் போது, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, ‘தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ’ விருதும் நமது பிரதமருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்காக, நாட்டு மக்கள் சார்பாகவும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எல்.முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.