சர்வதேச விண்வெளி மையத்தை சென்னையில் இருந்து நாளை பார்க்கலாம்
1 min read
The International Space Station can be seen from Chennai tomorrow.
5.7.2025
சர்வதேச விண்வெளி மையம், பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. அதனால் அதில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர். தற்போது அந்த விண்வெளி மையத்தில் இந்தியாவின் சுபான்ஷுசுக்லாவும் இருக்கிறார். இந்த விண்வெளி மையத்தை பூமியில் இருந்து சில நேரங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம். இந்த மையத்தை எந்த பகுதி மக்கள் பார்க்கலாம் என்பதனை நாசா தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விண்ணில் வலம் வரும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். அதன்படி நாளை காலை 5 மணியளவில் வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் தெரியும். இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம். இரவு 9.38 மணி முதல் 9.41 மணி வரை பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்திய பகுதிகளில் இருந்து பார்க்கலாம். மீண்டும் 10-ந் தேதி காலை 4.58 மணி முதல் 5.06 மணி வரை சென்னையில் பார்க்கலாம். அதிவேகத்தில் அது செல்வதால் ஓரிரு நொடி மட்டுமே விண்ணில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.