கண்ணாயிரத்தை பயமுறுத்திய குண்டர்கள்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
The goons who scared Kannayiram/ Comedy story/ Tapasukumar
6.7.72025
தாம்பரத்திலிருந்து புதுவைக்கு போலீஸ் வேனில் மனைவி பூங்கொடியுடன் வந்தார் கண்ணாயிரம். அவர் தீவிரவாதியை பிடித்துகொடுத்தார் என்ற தகவல் ஊரில் பரவியதால் கண்ணாயிரம் வீட்டுக்கு வந்ததும் வாலிபர்கள் அதிர் வேட்டுகளை வெடிக்க அந்த புகை மண்டலத்துக்குள் சிக்கிய கண்ணாயிரம் முகம் இருண்டிருக்க அவரது மனைவி அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்.
கண்ணாயிரம் அவரிடம், பூங்கொடி நான்தான் கண்ணாயிரம் என்று சொல்ல, அவர் கோபத்தில் கண்ணாயிரம் கன்னத்தில் ஓங்கி அடித்தார். வலிதாங்காத கண்ணாயிரம், ஏன் பூங்கொடி என்னை அடிச்ச.. என்று கேட்டார். அதற்கு அவர், ஒண்ணும் இல்ல.. நீங்க கண்ணாயிரம்தானா என்று டெஸ்ட் பண்ண அடிச்சேன்.நீங்க கண்ணாயிரம்தான் என்றார்.
உடனே கண்ணாயிரம், ஏ..பூங்கொடி நான்தான் கண்ணாயிரமுன்னு எப்படி கண்டுபிடிச்ச என்று கேட்க, அதுவா நான் உங்க கன்னத்திலே அறைஞ்சப்போ நீங்க திருப்பி என் கன்னத்திலே அடிக்கலைல்லா.. அதைவச்சிதான் கண்டுபிடிச்சேன். வேற யாராவது இருந்தால் என்னை திருப்பி அடிச்சிருப்பாங்கல்ல.. நீங்கதான் நான் எப்போ அடிச்சாலும் திருப்பி அடிக்கமாட்டீங்க என்று பூங்கொடி புகழ்ந்தார்.
உடனே கண்ணாயிரம் தன் கன்னத்தை தடவிவிட்டபடி, மனைவி கையால அடிவாங்குறதிலே இப்படியொரு நன்மை இருக்கா.. அதுக்காக பூங்கொடி அடிக்கடி என் கன்னத்திலே அடிக்காதே என்று கண்ணாயிரம் சிணுங்கினார்.
அவரிடம்,சரி.. சரி.. வீட்டுக்குள்ளே வேகமாக வாங்க.. மறுபடியும் வெடி போட்டுரப் போறாங்க, என்று பூங்கொடி சொன்னதும் கண்ணாயிரம் பாய்ந்து வீட்டுக்கு வந்தார். அப்போது டமார் என்று வெடிவெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே கண்ணாயிரம், ஏய் பூங்கொடி சீக்கிரம் கதவைதிற என்று கத்த, அவர் கதவை திறந்தவுடன் கண்ணாயிரம் வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.
பூங்கொடி அவரிடம், ஏங்க உங்க முகமெல்லாம் கரியா இருக்கு. பாத்ரூமுக்குள் போயி சோப்பு போட்டு நல்லா குளிங்க, என்று சொல்ல, கண்ணாயிரம் துண்டையும் சோப்பையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் புகுந்து கதவைப் பூட்டினார்.
அப்பாட.. புதுவையிலிருந்து தாம்பரத்துக்கு ரெயிலில் போனாலும் போனோம்.. ஒரு வழியாகிட்டோம்.. இனி வெளியூருக்கே போகக்கூடாது, என்றபடி இடுப்பில் துண்டு கட்டி குளிக்க தயாரானார்.
குழாயை திருக்கினார். தண்ணீர் வரவில்லை. வேகமாக கதவை திறந்த அவர், ஏய் பூங்கொடி குழாயில் தண்ணீர் வரல.. மோட்டார் போடு என்று கத்த, பூங்கொடி இதோ மோட்டார் போடுகிறேன் என்று சவிட்ச் போட்டார்.
மோட்டார் ஓடியது. அப்பாட.. என்றபடி கண்ணாயிரம் பாத்ரூமுக்குள் ஓடினார். குழாயில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வந்தது. பக்கெட்டில் கண்ணாயிரம் தண்ணீரை பிடித்தார். அதிலிரூந்து தண்ணீரை ஜக்கில் எடுத்து குளித்தார்.
குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா என்று பாட்டு வேறு பாடினார். பின்னர் முகத்துக்கு சோப்பு போட்டுவிட்டு முகத்தில் நுரையுடன், என்னை யார் என்று எண்ணி நீபாக்கிறாய்.. இது யார்பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்.. என்று அவர் உற்சாகமாக பாட, கரண்டு கட்டானது. குழாயில் தண்ணீர் ஒழுக தொடங்கியது.
என்னடா பக்கெட்டில் உள்ள தண்ணியை எல்லாம் குளிச்சிட்டேனே.. இப்ப என்ன பண்ணுறது.. முகமெல்லாம் நுரையா இருக்கே, என்று கண்ணாயிரம் முணங்க, ஏங்க வெளியே வாங்க.. கரண்டுகட்டாயிட்டு டிரார்ஸ்பார்மர் வெடிச்சிட்டாம் கரண்டுவர நேரமாகுமாம்.. வாங்க வெளியே என்று சொல்ல கண்ணாயிரம் முகத்தில் சோப்பு நுரையுடன் வெளியே வந்தார்.
அவரை பூங்கொடி ஒரு மாதிரி பார்க்க, கண்ணாயிரம் அவரைப் பார்த்து, என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாக்கிறாய்.. இது
யார்பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…ஆ..ஆ… என்று இழுக்க, பூங்கொடி அவரிடம், ஏங்க இவ்வளவு கழுதை குரலில் உங்களைத் தவிர வேற யாரும் பாடமுடியாது.. போய் முகத்தை துண்டால தொடைச்சிட்டு உட்காருங்க.. கரண்டுவந்த பிறகு குளிங்க என்றார்.
கண்ணாயிரம் சோப்பு நுரையுடன்.. நான் குளிக்க போகும் போதுதான் கரண்டு போகணுமா.. என்ன அநியாயம் என்றபடி நாற்காலியில் அமர்ந்தார்.
கரண்டுவராததால் புழுக்கமாக இருந்தது. விசிறியை எடுத்து வீசினார். ஜன்னலை திற பூங்கொடி. புழுக்கம் தாங்க முடியல என்று கண்ணாயிரம் சொல்ல, அவர் எல்லா ஜன்னல்களையும் திறந்துவைத்தார். அப்பாட இப்போ கொஞ்சம் காத்து வருது என்க, பூங்கொடி அவரிடம் முகத்தை துடைங்க.. பயமா இருக்கு என்றார்.
கண்ணாயிரம் துண்டால் முகத்தை துடைத்தார். இரவு வெகு நேரமாகியும் கரண்டுவரல. மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார் பூங்கொடி.
என்ன கரண்டுவராதா என்று கண்ணாயிரம் கேட்க, பூங்கொடி தெரியல என்றார். ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியாக கண்ணாயிரம் எட்டிப்பார்த்தார். இரண்டு குண்டர்கள் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு வயிற்றை கலக்கியது.
பூங்கொடி நீ கொஞ்சம் இரு.. வயிறு கலக்குது பாத்ரூம் போயிட்டுவர்ரேன் என்று ஓட, பூங்கொடி, அய்யோ..அங்க தண்ணி இல்ல என்று கத்த, கண்ணாயிரம், கொஞ்சம் தண்ணீர் இருக்கு..நீ ஜன்னலை பூட்டு.. குண்டர்கள் வெளியே நிக்கிறாங்க என்றபடி பாத்ரூமுக்குள் போய் கதவை பூட்டினார்.(தொடரும்)
வே.தபசுக்குமார்,புதுவை.