June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மாலையால் கண்ணாயிரத்துக்கு வந்த பிரச்சினை/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

A problem that brought tears to my eyes due to a garland/comedy story/Tapasukumar

16.5.2025
கண்ணாயிரம் தன் உயிருக்கு தீவிரவாதி மிரட்டல் இருப்பதாக கூறியதால் அவரையும் அவர் மனைவியையும் துப்பாக்கி ஏந்திய போலீசார், போலீஸ் வேனில் தாம்பரத்திலிருந்து புதுவைக்கு அழைத்து சென்றனர்.
கண்ணாயிரத்தின் இருபக்கமும் துப்பாக்கி போலீசார் அமர்ந்திருக்க,வேன் ஒரு இடத்தில் நின்றபோது, வேனை தள்ளிவிட வந்த வாலிபர்கள், வேனுக்குள்ளிருந்த கண்ணாயிரத்தை தீவிரவாதி போலவும் அவரது மனைவியை பெண் தீவிரவாதி போலவும் நினைத்து விமர்சிக்க கோபம் அடைந்த பூங்கொடி வேனை திறந்து சென்று யாரடா தீவிரவாதி என்று கேட்டு ரகளை செய்தார்.
இந்த சத்தம் கேட்டு வேனின் முன்பகுதியில் இருந்த இன்ஸ்பெக்டர் வேனைவிட்டு இறங்கி ஓடிவந்தார். என்ன பிரச்சினை என்று கேட்க, பூங்கொடி அவரிடம், இந்த வாலிப பசங்க எங்களை தீவிரவாதின்னு சொல்லுறாங்க.. அதான் சத்தம் போட்டேன் என்றார்.
இன்ஸ்பெக்டர் அவர்களிடம், டேய் இவர் கண்ணாயிரம். இவர் தீவிரவாதி இல்லை. தீவிரவாதியை பிடிச்சிக்கொடுத்த மாவீரர். அருகில் இருப்பவர் அவர் மனைவி பூங்கொடி என்று சொல்ல, வாலிபர்கள், அப்படியா.. என்று வாயைப் பிளந்தனர்.
நாங்க அவரது முழியைப் பாத்து தப்பா நினைச்சிட்டோம். ஆளைப் பாத்து எதிலும் எடைபோடக்கூடாது. கண்ணாயிரம் சார் எங்களை மன்னிச்சுக்குங்க என்று சொல்ல, கண்ணாயிரம் வேகமாக ம்.. என்னை சாருன்னு சொல்லாதீங்க.. சும்மா அண்ணன் அப்படின்னு சொன்னாப் போதும் என்றார்.
உடனே வாலிபர்கள்…அண்ணே.. அண்ணை சிப்பாய் அண்ண நம்ம ஊரு நல்ல ஊரு.. இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ண என்று பாட, கண்ணாயிரத்துக்கு வெட்கமாக இருந்தது.
இந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் இரண்டு ரோஜாப்பூ மாலை வாங்கி வந்தார். பெரிய தீவிரவாதியை பிடித்துக்கொடுத்த அண்ணன் கண்ணாயிரத்துக்கு இந்த பூமாலையை பொன்மாலையாக அணிவிக்கிறோம் என்றபடி ஒரு மாலையை அணிவித்தார்.
பின்னர் கண்ணாயிரத்திடம் ஒரு மாலையைக்கொடுத்து, கண்ணாயிரம் அண்ணா உங்களுக்கு உதவியாக இருந்த உங்க மனைவிக்கு இந்த மாலையைப் போடுங்க என்று கொடுக்க, கண்ணாயிரம் வெட்கத்துடன் பூங்கொடி கழுத்தில் அணிவிக்க வாலிபர்கள் கரவொலி எழுப்பினர்.
புதுவையில் போய் சேருகிறவரை இந்த மாலையை கழற்றாதீங்க.. மாலையோடு நீங்க இருந்தாத்தான் உங்களை பாக்கிறவங்க உயர்வா நினைப்பாங்க.. என்று சொல்லி கண்ணாயிரம் அண்ணன் வாழ்க என்று வாழ்த்து கோஷமிட்டனர்.
கண்ணாயிரம் வெட்கத்தால் சிரிக்க, பூங்கொடி நாணத்தால் முகம் சிவக்க.. வேன் புறப்பட்டது.
வாலிபர்கள் கை அசைத்து வழியனுப்ப, இன்ஸ்பெக்டர் ஓடி வந்து வேனின் முன்பகுதியில் வந்து ஏறினார்.
கண்ணாயிரத்தின் இருபக்கமும் துப்பாக்கி போலீசார் இருக்க, கண்ணாயிரம் அவர்களிடம், நீங்க இரண்டுபேரும் என்பக்கத்திலே இருப்பதால்தான் எல்லோரும் என்னை அக்யூஸ்டுன்னு நினைக்காங்க.. அதனால நீங்க அந்த சீட்டுல சேர்ந்து இருங்க.. நானும் என் மனைவியும் மாலையும் கழுத்துமா இந்த சீட்டிலே சேர்ந்து இருக்கிறோம் என்றார்.
அதைக் கேட்ட போலீசார், ஆமா..அதுவும் சரிதான்.. நீங்க இரண்டு பேரும் ஒண்ணா இருங்க என்றனர்.
உடனே கண்ணாயிரம் தன் மனைவியை தன் பக்கம் வருமாறு அழைக்க அவரும் கண்ணாயிரம் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
கண்ணாயிரமும் பூங்கொடியும் இணைந்து இருக்க ,பழைய நினைவுகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
ச்சி போங்க என்று கண்ணாயிரம் கன்னத்தில் பூங்கொடி இடிக்க, வேன் ஒரு மேட்டில் ஏறி இறங்க.. கண்ணாயிரம் மேல் பூங்கொடி சாய, கண்ணாயிரத்துக்கு வெட்கம் தாங்கல….அவர் சிரித்தார்.
ரோட்டில வேகத்தடை இருக்க்கிறது ஒருவகையிலே நல்லாத்தான் இருக்கு என்று கண்ணாயிரம் கேலியாக சொல்லியபடி வந்தார்.
வேன் வேகமாக சென்றது.
ஒரு ஓட்டல் வந்ததும் வேன் அந்த ஓட்டல் அருகே ஒதுங்கியது.இன்ஸ்பெக்டர் இறங்கினார். டிரைவர் இறங்கி பின்பக்கம் வந்தார். வேனில் இருந்த போலீஸ்காரர்களிடம், நீங்க இங்கே கண்ணாயிரத்துக்கு பாதுகாப்பா இருங்க.. உங்களுக்கு டீ அனுப்பிவைக்கிறேன் என்றபடி இன்ஸ்பெக்டருடன் டிரைவர் ஓட்டலுக்குள் சென்றார்.
இந்த நேரத்தில் ஓட்டலில் இருந்து வெளியே வந்த ஒரு ஜோடி , வேனுக்குள்ளிருந்த கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் மாலையும் கழுத்துமாகப் பார்த்தனர். கண்ணாயிரத்தைப் பார்த்து இந்த ஆளைப்பார்த்தா அறுபது வயசு இருக்கும் போலிருக்கு. பக்கத்திலே இருக்கிற பொண்ணுக்கு முப்பது வயசு இருக்கும் போலிருக்கு.. காலம் கெட்டுக்கிடக்கு.. இந்த வயசிலே கள்ளத்திருமணம் பண்ணியிருப்பான் போலிருக்கு.. அதான் போலீஸ் பிடிச்சி துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்புடன் அவங்களை கூட்டிட்டுப் போறாங்க போலிருக்கு..என்றார்.
உடனே அந்த பெண், ஏங்க எனக்கும் அப்படிதான் தெரியுது. வயசான அந்த ஆள் கூப்பிட்டா இந்த பொண்ணுக்கு அறிவு எங்கே போச்சு.. நான் அந்த பொண்ணுக்கிட்ட நாலுவார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன் என்று வேன் பக்கம் வந்தார்.
பூங்கொடியைப் பார்த்து, ஏம்மா உனக்கு அறிவு இருக்கா.. உன் புருசனை விட்டுட்டு இந்த வயசான ஆளை கல்யாணம் பண்ணியிருக்கியே.. இது நியாயமா.. அப்படி இவருக்கிட்ட என்ன இருக்கு, கள்ளக்கல்ணாணம் பண்ணுன உன்னை போலீஸ் பிடிச்சிட்டாங்களா என்று சத்தம் போட, பூங்கொடிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
வேனைவிட்டு இறங்கி அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து, யாரடி பாத்து கள்ளக்கல்யாணமுன்னு சொன்ன.. அவர் என் சொந்த புருசன்டி.. என் அத்தை மகன்.. அவரை நீ குறை சொல்லுறீயா என்று அந்த பெண்ணின் கன்னத்தில் அறைய, அந்த பெண்ணோ நீங்க மாலையோட போலீஸ்பாதுகாப்போடு இருக்கிறதாலே அப்படி நினைச்சிட்டேன் என்று கெஞ்ச, பூங்கொடி அவரை விடவில்லை. கீழே தள்ளி கும் கும் என்று குத்த அந்த பெண்ணின் கணவர், அய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்த கண்ணாயிரம் வேனிலிருந்து கீழே இறங்கி பூங்கொடியை தடுக்க அவரது முகத்தில் ஒரு குத்து விழ, அவர் அம்மாடி என்று அலறினார். (தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *