மாலையுடன் படுத்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayiram sleeping with a garland/ Comedy story/ Tapasukumar
28.5.2025
கண்ணாயிரத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் தாம்பரத்திலிருந்து அவர் புதுவைக்கு வேனில் சென்றபோது துப்பாக்கி ஏந்திய போலீசார் இரண்டு பேர் அவர் அருகில் அமர்ந்து வந்தனர். ஆனால் கண்ணாயிரத்தை தவறாக தீவிரவாதி என்று சிலர் நினைத்ததால் தகராறுவர, தீவிரவாதிகளை பிடித்து கொடுத்தவரே கண்ணாயிரம் என்பதை அறிந்து கண்ணாயிரத்துக்கும் அவர் மனைவி பூங்கொடிக்கும் வாலிபர்கள் மாலை அணிவித்து பாராட்டி அனுப்பிவைத்தனர்.
வேனில் மாலையுடன் இருந்த கண்ணாயிரத்தையும் அவர் மனைவியையும் கள்ளத்தனமாக திருமணம் செய்த ஜோடியை போலீஸ்பிடித்து செல்வதாக ஒரு பெண் சொல்ல, பூங்கொடி கோபம் அடைந்து அந்த பெண்ணை தாக்க, இன்ஸ்பெக்டர் ஓடி வந்து பூங்கொடியை தடுத்தார்.
என்னம்மா.. இப்ப பிரச்சினை என்று கேட்க, பூங்கொடி கோபமாக, நாங்க மாலைபோட்டிருக்கிறதால கள்ளத்தனமாக திருமணம் செய்த ஜோடி என்று இந்த பொம்பளை கிண்டல் பண்ணுறா.. அதான் அடிச்சேன் என்க, இன்ஸ்பெக்டர் தலையில் கைவைத்தார்.
கிண்டல் செய்த பெண்ணிடம்,கண்ணாயிரமும் பூங்கொடியும் உண்மையான கணவன் மனைவி. கண்ணாயிரம் தீவிரவாதிகளை பிடிச்சிக்கொடுத்ததால மாலை போட்டு கூட்டிட்டுப் போறம்.. அவ்வளவுதான் என்றார்.
அந்த பெண்ணும், அப்படியா.. இவர் கோமாளி மாதிரி இருக்காரு.. இவரா தீவிரவாதியை பிடிச்சிக்கொடுத்தாரு.. நம்பவே முடியல என்க, இன்ஸ்பெக்டர், இதை நீங்க நம்பித்தான் ஆகணும். இவர் பிடிச்சிக் கொடுத்தாருன்னுதான் மற்ற தீவிரவிதிகள் இவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துவர்ராங்க என்றார்.
அந்த பெண், அய்யோ.. ஆபத்தான ஆளா இருப்பார் போலிருக்கே, என்றபடி அங்கிருந்து ஓடினார்.
அதைப்பார்த்த பூங்கொடி, இந்த பொம்பளைக்கு பாராட்டியே பழக்கம் இல்லை போலிருக்கு.. இந்த மாலையை போட்டிருக்கிறதாலத்தான தப்பா நினைக்கிறாங்க.. மாலையை நான் கழற்றிப் போட்டுவிடுகிறேன் என்று கழற்றினார்.
அதைப் பார்த்த கண்ணாயிரம், ஏய்.. கீழே போட்டிறாத.. நானே அந்த மாலையை போட்டுக்கொள்கிறேன் என்று பூங்கொடியிடமிருந்து மாலையை வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டார்.
இப்பம் எப்படி இருக்கு என்று மனைவியிடம் கேட்க, அவர் நல்லா இல்லை என்றார்.
அப்படியா..எனக்கு இரண்டு மாலை போட்டது நல்லா இருக்கு என்று கண்ணாயிரம் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார்.
பூங்கொடியிடம் இன்ஸ்பெக்டர்.. ஏம்மா.. ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் சொல்லு.. நான் தீர்த்துவைக்கிறேன். சும்மா அடிதடின்னு இறங்கிடாதே என்று சொல்ல பூங்கொடி.. ம் என்றார்.
அடுத்து வேன் புறப்பட்டது. மெதுவா போ என்று டிரைவரிடம் இன்ஸ்பெக்டர் சொல்ல, டிரைவர் மெதுவாக வேனை ஓட்டினார்.
கண்ணாயிரமும் அவர் மனைவியும் ஒரு சீட்டில் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் எதிரே உள்ள சீட்டில் இருந்தனர். வேன் மெதுவாக சென்றதால் கண்ணாயிரத்துக்கு தாலாட்டுவது போல் இருந்தது. அப்படியே கண்சொக்க காலை நீட்டி சீட்டில் கண்ணாயிரம் படுத்தார்.
ஏதோ அலுப்பில் படுக்கிறார் என்று பூங்கொடி நினைத்தார். அமைதியாக இருந்தார்.
சிறிது நேரத்தில் கண்ணாயிரம் கண்களை மூடி தூங்கினார். அந்த நேரத்தில் பிண ஊர்வலம் எதிரில் வந்தது. கழுத்தில் மாலைகள் போட்டு ஒருவர் படுத்திருக்க அவரை கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றனர். அதைப் பார்த்துவிட்டு மாலையுடன் படுத்திருந்த கண்ணாயிரத்தைப் பார்த்த போது பூங்கொடிக்கு கண்ணாயிரமும் அதேபோல் தெரிந்தார்.
இதைப்பார்த்திட்டு எவனாவதுஒருத்தன் புருசன் பிணமா கிடக்கான் பொண்டாட்டி அழாம கல்லுமாதிரி இருக்கா என்று சொன்னாலும் சொல்வாங்க என்று நினைத்தவருக்கு பகீர் என்றது.
உடனே..ஏங்க.. எழும்புங்க..ஏங்க எழும்புங்க, என்று கண்ணாயிரத்தை பூங்கொடி தட்டி எழுப்ப, தீவிரவாதி வந்துவிட்டான் போல என்று கண்ணாயிரம் பதறியபடி எழ, வெளியே பிண ஊர்வலம் போவதைப் பார்த்ததும் ஆ..என்று மயங்கிவிழுந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.