பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை
1 min read
Three sentenced to death for rape and murder of minor girl
11/7/2025
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு 15 வயதான மாணவியை, குற்றவாளிகளில் ஒருவன், இரண்டு நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்த சம்பவம் தொடர்பாக 20 முதல் 27 வயதான 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்குஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த சிறுமி காணாமல் போனதாக ராஜ்குஞ்ச் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் அந்த சிறுமியை கடத்திச் சென்று, அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் அடைத்து வைத்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவுநீர் தொட்டியில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஜல்பைகுரியில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
நீதிபதி ரிந்து சுர் வழக்கை விசாரித்து ரகுமான் அலி உள்பட 3 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ரிந்து சுர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் தீர்ப்பை வாசித்தார்.
அப்போது அவர், இந்த குற்றம் அரிதிலும் அரிதானது. எனவே குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.