June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

காமராஜரை அசிங்கப்படுத்தியப் பிறகு தி.மு.க. கூட்டணியில் காங். இருக்கலாமா? – அண்ணாமலை கேள்வி

1 min read
Should Congress be in the alliance after disgracing Kamaraj himself? - Annamalai Question  
17.7.2025
திமுக எம்.பி. திருச்சி சிவா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜர் குறித்து கூறிய ஒரு தகவல் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா பேசும்போது, காமராஜர் ஏசி இல்லாமல் தூங்கமாட்ட்டார், ஏனென்றால் அவருக்கு அலர்ஜி இருந்தது, இதனால் அவருடைய உடல்நிலை கருதி காமராஜர் தங்கும் அரசு பயணியர் விடுதிகளில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் அரசு சார்பில் ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டது என கூறினார். தங்களை எதிர்த்து தான் அரசியல் செய்கிறார் என்றாலும் அவருக்கான மரியாதையை திமுக கொடுத்தது என தெரிவித்தார். ஆனால், திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகிகளும் திருச்சி சிவா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காமராஜர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விவாதப் பொருளாக்கிட வேண்டாம். அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் இந்த சர்ச்சையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

இந்தநிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.

வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் திமுக, கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தியுள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக காங். தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா? உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப் போட்டியிடத் தயாரா? கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதை நான் மட்டுமல்ல.. சாதாரண மக்களும் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி ஆட்சி பற்றி அண்ணாமலை கூறியதாவது:-

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்று மிகத்தெளிவாக அமித்ஷா கூறிவிட்டார். அவரது கருத்தையே நான் பேசுகிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன். அதிமுகவுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதிமுகவினர் அமித்ஷாவுடன் பேசட்டும். கூட்டணி ஆட்சி கருத்தை தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் இருக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா தொடர்ந்து தெளிவாக கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி குறித்து பேச தொடங்கி விட்டன. தனது கட்சி அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு தொண்டனும் நினைப்பான். அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் எனது பங்கு எதுவும் இல்லை. நான் ஒரு தொண்டன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *