June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் நெரிசலை தவிர்க்க டிக்கெட் கட்டப்பாடு

1 min read
Ticket restrictions to avoid congestion in unreserved train coaches 
17.7.2025
இந்தியன் ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகிறது. சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு உள்பட பல்வேறு புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக ரெயில் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

74 ஆயிரம் ரெயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் ரெயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. என்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு என்ஜினிலும் 6 அதிநவீன கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில், ரெயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகள் தத்ரூபமாக பதிவாகும்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். ஒரே நேரத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க ஏராளமானோருக்கு டிக்கெட் வழங்கியதால் இந்த சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை ரெயில்வே கொண்டுவர உள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, நீண்ட தூர ரெயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

எடுத்துக்காட்டாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.

முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால், தினந்தோறும் ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *