June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் பல்கலைக்கழக பேராசிரியை படுகொலை

1 min read


University professor murdered in Delhi

5.6.2026
கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது கணவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை முதலே பேராசிரியை தேபோஸ்மிதா பால் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி பாலுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் தனது சகோதரிக்கு போன் செய்து பார்த்தார். பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் தேவரதி பால், தனது சகோதரியின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது அவரது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என அஞ்சிய தேவராதி பால், பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து பார்த்தார். அப்போது அங்கு தனது சகோதரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். படுகொலை செய்யப்பட்ட பேராசிரியை தேபோஸ்மிதா பால் தலையில் ஆழமான காயம் காணப்பட்டது. மேலும் அவரது கை மணிக்கட்டில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. யாரோ அவரை தலையில் பலமாக தாக்கி, கை மணிக்கட்டு நரம்பை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் பேராசிரியை தேபோஸ்மிதா பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்த நகைகளும், பணமும் அப்படியே இருந்தது. எனவே கொள்ளை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியை தேபோஸ்மிதா பால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *