June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைனில் மட்டுமே வேட்பு மனு தாக்கல்-தேர்தல் கமிஷன் நடவடிக்கை

1 min read

Election Commission moves to file nominations online only
24.7.2025
தேர்தலில் போட்டியிடுவோர், இனி ஊரைக்கூட்டி ஊர்வலம் சென்று மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே கொண்டாட்டம் தொடங்கிவிடும். ஒரு பக்கம் தேர்தல் பிரசாரம் நடந்து வரும். மறுபக்கம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும். வேட்பாளர்கள் மேளதாளத்துடன், மக்களிடம் நேரில் சென்று ஓட்டு கேட்பார்கள். தற்போது அந்த காலம் சிறிது மாறி வருகிறது. தொழில்நுட்பத்தின் புரட்சிகரமாக, தேர்தல் பிரசாரம் சமூக வலைதளத்தில் செய்யப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்யபோகும், வேட்பாளர்கள் மேள, தாளத்துடன் ஊர்வலம் சென்று தாக்கல் செய்வார்கள். இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ஏராளம். ஒரே நேரத்தில் பல வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
சரியான நேரத்துக்கு வந்தும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் வேட்பாளர்கள் புகார் கூறுவது வாடிக்கையாக இருக்கிறது. பத்திரிகை, டிவிக்களில் செய்தியில் வர வேண்டும் என்பதற்காக அலையும் விளம்பர நோக்கம் கொண்ட வேட்பாளர்களும் விதவிதமான ‘கெட்அட்’களில் வந்து வேட்பு மனு தாக்கலில் கலந்து கொண்டு அலப்பறை செய்கின்றனர்.
இது போன்ற அக்கப்போர்களுக்கு முடிவு கட்டும் வகையில், வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் கமிஷன் சுவிதா என்ற இணையதளத்தை ஏற்கனவே பயன்பாட்டில் வைத்துள்ளது. இந்த, இணையதளத்தில், வேட்பாளர்கள் தங்களது பெயர், செல்போன் எண் கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் நமது முழு விவரங்கள் அனைத்தும் தானாக பூர்த்தி ஆகிவிடும். இதையடுத்து, வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சொத்து மற்றும் வழக்கு போன்ற அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யலாம். தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம்.
இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யலாம். இது குறித்து மத்திய தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க அனைத்தையும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் மாற்றி விட்டது. இனி வேட்பாளர்கள் ஆன்லைன் முறையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இந்த நடைமுறை வரும் நவம்பர் மாதம் பீகார் தேர்தலில் கொண்டுவரப்படும்.
அதில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து அடுத்த ஆண்டு தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் முழு அளவில் செயல்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் முறை விண்ணப்பம் வேட்பாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *