June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள்

1 min read

Actionable changes coming soon to TASMAC

4.6.1016
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவிடப்பட்டன. இதனையடுத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தனியார்மயமாக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்த யூகங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகக் கருதுகின்றனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் நீண்டகாலமாக தொடரும் பல்வேறு சிக்கல்களே இந்த முடிவுக்கு வழிவகுக்கும் என்பது தெரிவிக்கப்படுகிறது.

முக்கியக் காரணங்களில் ஒன்று டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டங்கள். அண்மைக் காலமாக ஊழியர்கள் எதிர்கொள்ளும் அதிக பணிச்சுமை, காலிப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், மற்ற மாநிலங்களை விடக் குறைவான சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், மதுபானங்களின் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படும் முறைகேடுகள் தொடர்ந்து வருகின்றன. கடை வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இந்த முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனைத் தனியார் வசம் ஒப்படைத்தால் நிர்வாக சுமை குறையும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டாஸ்மாக்கின் முக்கிய அதிகாரிகளை விரைவில் பணியிட மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும், வருகிற 30-ம் தேதி பார் டெண்டர் முடிவடையும் நிலையில், நடைமுறைகளை சீரமைக்கவும், தேவையான உரிய நெறிமுறைகளுடன் புதிய டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டாஸ்மாக்கில் பாட்டிலை திருப்பித் தரும் திட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *