June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 விசயங்களை இந்தியா உலகிற்கு உணர்த்தியது- பிரதமர் மோடி பேச்சு

1 min read

India taught the world 3 things through Operation Sindoor – PM Modi’s speech

30.7.2025
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் நேற்று முன்தினம் பேசினார்.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் பேசினர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி அவையில் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22-ந்தேதி, அப்பாவி மக்களின் மதம் என்னவென்று கேட்டு விட்டு, அவர்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் கொடூரம் வாய்ந்தது. அது கொடூரத்தின் உச்சம். இந்தியாவை வன்முறை தீயில் தள்ளுவதற்கான நன்றாக திட்டமிடப்பட்ட முயற்சி.

இந்தியாவில் வன்முறைகளை பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதி திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்றார். இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது.
பாகிஸ்தான் நாட்டின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. எந்த பகுதியில், எப்போது, எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோன்று, உலகின் எந்த தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தும்படி கூறவில்லை என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி கூறினார். தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டு கொண்டது. எங்களால் முடியவில்லை. தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என பாகிஸ்தான் கதறியது. நாம் பாகிஸ்தானை மண்டியிட வைத்து விட்டோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது என்று அவர் பேசினார்.

3 விசயங்களை இந்தியா முடிவு செய்துள்ளது என ஆபரேஷன் சிந்தூர் உலகத்திற்கு உணர்த்தி உள்ளது என பிரதமர் மோடி கூறினார். இதுபற்றி பேசிய அவர், இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், எங்களுடைய சொந்த வழியில், எங்களுடைய நிலைமைக்கேற்ப, எங்களுடைய நேரத்தில் நாங்கள் பதிலடி தருவோம். மற்றொன்று, அணு ஆயுத மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது.
3-வது, பயங்கரவாத ஆதரவு அரசையும் மற்றும் பயங்கரவாதத்திற்கு மூளையாக செயல்படுபவர்களையோ தனிப்பட்ட இரு அமைப்புகளாக எங்களால் பார்க்க முடியாது என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *