August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த பாஜக முயற்சி

1 min read

BJP tries to appease O. Panneerselvam

1/8/2025
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த கூட்டணி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளது. அதே நேரம் தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘நம்மை மதிக்காத பாஜக கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது’ என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று 2 முறை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். வரும் 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக நிர்வாகிகளின் வாக்குறுதியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *