தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை- மு.க.ஸ்டாலின் திறப்பு
1 min read
MK Stalin inaugurates electric car manufacturing factory in Thoothukudi
4.8.2025
தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த ‘வின்பாஸ்ட்’ நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1½ லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் ‘வி.எப்-6, வி.எப்-7’ ஆகிய 2 வகை கார்களை விற்பனைக்கு வழங்குவதற்கு வின்பாஸ்ட் நிறுவனம் தயாரானது.
இந்நிலையில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து வின்பாஸ்ட் ஆலைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற விழாவில் ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைத்தார்.
முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழியுடன் சேர்ந்து மின்சார காரில் முதல் பயணம் செய்தார்.