அக்டோபர் முதல் வங்கிகளில் சில மணி நேரத்தில் காசோலைகளுக்கு தீர்வு
1 min read
Cheques to be cleared in a few hours in banks from October
14.8.2025
வங்கிகளில் தற்போது காசோலைகளை (செக்) பணமாக்க 2 நாட்கள் வரை பிடிக்கிறது. சி.டி.எஸ். முறையில் காசோலைகளை சுழற்சி செய்ய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்க அவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது. இது தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து காசோலை தீர்வு திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, சி.டி.எஸ். முறையில் சில மாற்றங்களை கொண்டு வருகிறது. அதாவது ‘ஆன்ரியலைசேசன் சென்டில்மென்ட்’ முறையில் தொடர்ச்சியான தீர்வுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
அதன்படி சி.டி.எஸ். முறையில் இரண்டு கட்டங்களாக மாற்றம் கொண்டுவரப்படுகிறது. முதல்கட்டம் அக்டோபர் 4-ந் தேதி முதலும், இரண்டாம் கட்டம் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதலும் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த விதிமுறைகளின்படி வங்கிகளால் பெறப்பட்ட காசோலைகள் உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் வங்கிகளால் ஸ்கேன் செய்யப்பட்டு தீர்வு மையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் வழங்கப்பட்ட ஒவ்வொரு காசோலைக்கும் வங்கி நேர்மறையான உறுதிப்படுத்தல் அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை உருவாக்கும்.
இதன் மூலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்குள் பெறப்படும் காசோலைகள் அன்று இரவு 7 மணிக்குள் பணம் பெறும் வங்கிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2-வது கட்டத்தில் காசோலை பெறப்பட்டதில் இருந்து 3 மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்படும். இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.