தென்காசி அருகே கட்டிட தொழிலாளி குத்திக் கொலை- நண்பர்கள் 2 பேர் கைது
1 min read
Construction worker stabbed to death near Tenkasi – 2 friends arrested
20/8/2025
தென்காசி அருகே கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் கீழத்தெருவை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் செந்தில் முருகன் (வயது 45) இவர் கட்டிட தொழிலாளி அதே பகுதி காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் திருமலைக் குமார் (வயது 45) கூலித் தொழிலாளி, அய்யாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் விக்னேஷ் (வயது 63)
இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது செந்தில் முருகன் திருமலை குமாருக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த திருமலை குமார் தனது நண்பர் கால்நடை மருத்துவர் விக்னேஷை அழைத்துக் கொண்டு செந்தில் முருகனை தேடி அவரது வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லை சிறிது நேரத்தில் செந்தில்முருகன் தனது நண்பர்களான திருமலை குமார் மற்றும் விக்னேஷை சந்தித்து தனது வீட்டிற்கு தேடிவந்தது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது திருமலை குமார் மற்றும் விக்னேஷ் இருவரும் சேர்ந்து செந்தில் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமலைக் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில் முருகன் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் கீழே சாய்ந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்த திருமலை குமார், விக்னேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி எஸ்பி அரவிந்த், டிஎஸ்பி தமிழ் இனியன் தென்காசி இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின், சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செந்தில் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தென்காசி போலீசார் தப்பி ஓடிய திருமலை குமார், விக்னேஷ் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.