June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடையில்லை- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

1 min read

There is no prohibition on outsourcing cleaning services to private companies – Chennai High Court order

20.8.2025

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 பேரை 30 மாநகர பஸ் மூலம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களில் அழைத்து சென்று தங்க வைத்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அண்மையில் நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். மாநகராட்சியின் நடவடிக்கையால் 2000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது.

மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2000 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 1,900 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், பணிக்கு சேர்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க தயார் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. சென்னை மாநகராட்சி, ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *