June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை தவெக மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் கார் சேதம்

1 min read

Madurai Thaweka Conference: Controversy as 100-foot flagpole suddenly falls

20.8.2025
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளன. கடைசி கட்ட பணியாக மாநாட்டு திடலின் நுழைவு பகுதியில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பத்தை கிரேன் மூலம் நடும் பணி நடைபெற்றது. அப்போது கிரேனில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் அறுந்ததால் கொடிகம்பம் கீழே விழுந்தது.
அப்பகுதியில் நின்ற கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமடைந்த கார் மற்றும் கொடிக்கம்பம் அப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டது.
கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக தவெக நிர்வாகி சி.டி. நிர்மல் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே இவ்வளவு பெரிய அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் விழுந்த நிகழ்வை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அடுத்த முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வோம். இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை. மாற்று ஏற்பாடு தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஏற்பாடு பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை.
கார் ஒன்று சேதமடைந்துள்ளது. காரின் உரிமையாளரிடம் பேசியுள்ளேன். தேவையான இழப்பீடு அவருக்கு அளிக்கப்படும். அவரும் தவெக நிர்வாகிதான். அவருக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். ‘கொடி மீண்டும் ஏற்றப்படுமா?’ என்று கேட்கிறீர்கள். மாற்று ஏற்பாடுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். தலைவருடன் பேசிய பிறகு இது குறித்து அறிவிக்கப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *